RSS

இஸ்லாமும் ஊடகமும்


ஒவ்வொரு தூதரையும் அவருடைய
சமூகத்தாருக்கு அவர் விளக்கிக்
கூறுவதற்காக அவர்களுடைய
மொழியிலேயே (போதிக்கும் படி) நாம்
அனுப்பிவைத்தோம்;
அல்குர்ஆன் 14:4.

"அவர்களின் மொழியிலேயே" என்பதற்கு பல கருத்துக்கள் கூறப்படுகிறது.அதில் அவர்கள் காலத்தின் தொழில்நுட்ப கருவி என்றும் பொருள்கொள்ள சாத்தியம் உண்டு.அதனால் தான் சூனியம் பரவலாக இருந்த காலத்தில் சூனியம் பற்றி தெரிந்த இறைதூதராக மூஸா அலை அவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.மருத்துவம் பரவலாக இருந்த காலத்தில் மருத்துவ வல்லுனராக ஈஸா அலை அவர்களை அல்லாஹ் அனுப்பினான்.மொழி இலக்கியம் மேலோங்கியிருந்த காலத்தில் வந்த நபி ஸல் அவர்கள் ஜவாமிவுல் கலிம் எனும் மொழித்திறன் பெற்ற மாமனிதராக நபி ஸல் அவர்களை அல்லாஹ் அனுப்பினான்.

நபி சுலைமான் அலை அவர்கள் தமது பரிவாரங்களுடன் செல்லும் பொழுது அவரிடம் இருந்து சென்ற பறவை எங்கோ சென்று தாமதமாகி வந்தது.காரணம் கேட்க்கும் போது பக்கத்து ஊருக்குச் சென்றதாகவும் அங்கே ஒரு ராணியையும் அவருடைய மக்களையும் அவர்கள் சூரியனை வழிபடுவதைக் கண்டதாகவும் எடுத்துக் கூறியது.

"(அப்பறவை)சிறிது நேரமே தாமதித்தது உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியது. நான் ஒரு பெண்ணைக் கண்டேன் அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள்.அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும்,அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்.அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி,அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான்.எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் :27 : 22,23,24)"

இந்நிகழ்ச்சி அன்றைய வியத்தகு ஊடகத்துறையின் சான்றாகும்.ஏனெனில் அவ்வப்போது மனிதனின் தேவையை அறிந்து அல்லாஹ் மனிதனுக்கு நுன்னிய அறிவையும்,ஆற்றலையும் ஏற்ப்படுத்துகின்றான்.அது மாத்திரமின்றி ஊடகத்துரையின் முதற் படியான அஞ்சல் வினியோகத்தை அல்லாஹ்வே மனிதனுக்கு கற்றும் கொடுத்தான்.இதற்க்குச் சான்றாக சுலைமான் நபி பக்கத்து நாட்டு ரானிக்கு எழுதிய கடிதத்தை ஞாபகப் படுத்தலாம். அது(அந்தக் கடிதம்)சுலைமானிடமிருந்து வந்துள்ளது.

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…என்னை மிகைக்க நினைக்காதீர்கள்.கட்டுப் பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! என்று அதில் உள்ளது.(27:30)

இது போன்றே நபி(ஸல்) அவர்களும் கூட பல நாட்டு அரசர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பற்றி நாம் ஹதீஸ்கள் வாயிலாக அறிந்து கொண்டிருக்கிறோம். நபி(ஸல்)அவர்கள் ஹிர்க்கல் மன்னருக்கு கடிதம் எழுதினார்கள். அதனை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று; ஆரம்பித்தார்கள். (புகாரி : 07)

இத்துறை நவீன மயப்படுத்தப்பட்டு தபால் இலாகா ஒன்று அமைக்கப்பட்டதனை அராபிய வரலாறுகளில் காண்கின்றோம்.ஆனால் அக்காலத்தே இருண்டு கிடந்த ஐரோப்பியாவின் அரசர்கள் அப்போதுதான் கையொப்பமிடப் பழகிக் கொண்டிருந்ததையும் நாம் மறந்துவிடலாகாது.

தற்காலத்தில் வளர்ச்சியின் உச்சியில் இருக்கின்ற தொடர்பு சாதனங்களை நல்ல நோக்கங்களுக்காக பயன் படுத்த நாம் முன் வரவேண்டும்.
13 September  2014